16 June, 2011

மாற்றான் தோட்டத்து மலர்- குமுதம்


 
 
 
 
 
 
 
 
''அதையேன் கேட்கறே. 'அம்மா' டெல்லிக்கு போனாலும் போனாங்க 'ஐயா'வுக்கு இங்க ஆட்டம் கண்டிருக்கு. அதிமுக-காங்கிரஸ் உறவு வந்துடுச்சோன்னு நடுங்குறாரு.பத்திரிகைங்கதான் அப்படி எல்லாம் சொல்லுது.ஆனால் என்ன நடந்தாலும் சரி.நாங்க காங்கிரஸ் கூட்டணியில இருந்து வெளியேற மாட்டோம்.அதுவே வெளிய அனுப்பினாலும்கூட எங்களை யாரும் பிரிக்க முடியாதுன்னு'எல்லாம் கடிதம் எழுதி கலாய்க்கிறாரு.எதிர்கட்சி அந்தஸ்து இல்லாம கூட இந்தளவுக்கு தோற்றுப்போய் இருக்கோம். இதுக்க மேலவும் நாங்க தோற்றுட மாட்டோம்னு சொல்றாரு'' என்று அன்வர்பாய் விளக்கம் சொன்னார்.



'ஒரு வேளை அப்படி ஒரு உறவு மலர்ந்திடுமோ? டெல்லி போன முதல்வர் நாம் நடந்த காலங்களில் இருந்ததைப் போல இந்த முறை இருக்க மாட்டோம்.காங்கிரஸ் உடன் சுமூகமாகவே நடந்துகொள்வோம்னு வேற செயல்பட்டிருக்காங்க. அத வச்சுதான் கலைஞர் பயந்திருப்பாரோ?'- சித்தன் தெரியாமல் கேட்டு வைத்தார்.



"அடப்ப பாவிங்களா. அரசியலே அங்கதான்பா ஆரம்பமாகிறது. காங்கிரஸ் கூட கூட்டணி வச்சதாலதான் இந்தளவு தோற்றிருக்கோம்.ஈழப் பிரச்சனையில காங்கிரஸ் தலைமைதான் சிங்களத்துக்கு எல்லாவித உதவியும் செய்ததுங்கிறதை தமிழக மக்கள் தெரிஞ்சுகிட்டாங்க.அது நமக்கு தெரியாமப் போச்சு.தெரிந்தாலும் இந்த சனியன் புடிச்ச 2ஜி-ஸ்பெக்ட்ரம் ஊழல் முறைகேட்டிற்காக பொறுத்து போகவேண்டியதாயிச்சு. அது வேற இருந்தாலும் தனியே நின்றிருந்தாகூட ஒருவேளை எதிர்க்ட்சி அந்தஸ்து கிடைச்சிருக்குமோன்னு இப்ப கவலைப்படுறாரு.அடுத்து இப்போ உள்ளாட்சித் தேர்தல் வரப்போகுது. அதையும் கோட்டை விட்டா திமுக-வுல ஒருத்தன் கூட இருக்க மாட்டான்.அதனால காங்கிரச விட்டுட்டு அந்த உள்ளாட்சி தேர்தலை சந்திக்கணும்னு திட்டம் வச்சிருக்காரு தெரியுமா?" என்றார் சுவருமுட்டி.

"அது எப்படிப்பா. காங்கிரஸ் கட்சியை விட்டா இப்போ அவருக்கு வேற நாதியே இல்லை. 2ஜி ஊழல் வழக்குல அடுத்து என்னென்ன நடக்கும்னு எல்லாம் தெரியுமே?"- சித்தன்.



"நீங்க நினைக்கிறது அப்படி. ஆனால் அரசியல்ல பழம் தின்னு கொட்டை போட்டவரான கலைஞர் நினைப்பது வேற.எப்படியாவது காங்கரஸ்-அதிமுக கூட்டணி உறவு வந்துடுச்சுன்னா, பிறகு அந்தக் கூட்டணியில இருக்கிற இடதுசாரி கட்சிகள் வெளிய வந்துடும்.அப்படியே விஜயகாந்தையும் இழுத்திடலாம்.பொறுப்பான எதிர்கட்சியா இருந்தால்தான் விஜயகாந்த் அடுத்த தேர்தலுக்குள்ள மக்கள் நம்பிக்கைய பெற முடியும். கூட இருந்துகிட்டே அதிமுக-விற்கு ஜால்ரா அடுசிக்கிட்டிருந்தா மக்கள் கழட்டி விடுவாங்கன்னு சொல்லிப் புரிய வச்சாபோதும். அவர் எதிர்க் கட்சியா மட்டுமில்ல, அதிமுக-வுக்கு எதிரிக் கட்சியாகவே மாறிடுவாருன்னு கணக்கு வச்சிருக்காரு.அதைப் பயன்கடுத்த உள்ளாட்சி தேர்தலில் போதிய இடத்தை பிடிச்சிட்டோம்னா திமுக-காரங்க கட்சியில தங்கியருப்பாங்க இல்லையா....



அது மட்டுமல்ல.வரும் காலத்தில எப்படியும் அந்த 1,76,000000000.....ஊழல் வழக்குல திமுக முக்கிய ஆளுங்களை எல்லாம் டெல்லி திகார் சிறை உள்ள வச்சுக்கப் போகுது. அப்படி நடக்குறப்போ 'எல்லாத்துக்கும் காரணம் அதிமுகதான். அந்த அம்மா தூண்டிவிட்டுதான் டெல்லி காங்கிரஸ் இப்படி ஒரேடியாய் எங்களை பாடாய்படுத்துதுன்னு சூப்பர் அரசியல் செய்யலாம் இல்லையா. அப்படி சொல்லிச் சொல்லியே மக்கள்கிட்ட அனுதாபத்தை தேடிக்கலாம் இல்லையா. அதனால சும்மா 'எங்க கூட்டணிய யாரும் உடைக்க முடியாது. சதி நடக்குது, பத்திரிகைகாரங்கதான் அந்த சதியில ஈடுபட்டிருக்காங்கன்னு சும்ம சொல்லிகிட்டே இருக்காரு. அப்படியே இடையில இடையில 'கூடா நட்பு'...அதுதான் இப்படி ஒரு தோல்வின்னு சொல்லி உசுப்பேத்துறாரு'' என்று விவரித்தார் சுவருமுட்டி.



"ஏம்பா நீ சொல்றது குழப்பமா இருக்கு. இந்தப் பக்கம் என்னடான்னா ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ' ஒரு பக்கம் காங்கிரஸ் கூட்டணியாலதான் இந்தளவு தோல்வி.பேசாம அந்தக் கூட்டணியை விட்டு வெளியில வாங்கன்னு வீரமணி, ராமதாஸ், திருமாவளவன் ஆகியோரை வச்சு அறிக்கை விட வைக்கிறாரு கலைஞர். தைரியம் இருந்தா அதை அவரே நேரடியா சொல்லிட வேண்டியதுதானே.சும்மா எதுக்கு காங்கிரஸை மிரட்டிப்பார்க்கிறாரு. அந்த மிரட்டல் எல்லாம் இனிமேலும் எடுபடாதுன்னு' போட்டுத் தாக்கியிருக்காரே. அதை வச்சு பார்க்கிறப்போ திமுக- காங்கிரஸ் கூட்டணி பணால் ஆயிடும்னு இல்ல தோணுது"- என்ற சந்தேகத்தை எழுப்பினார் கோட்டை கோபாலு.



''அவர்கள் என்ன வேண்டுமானாலும் 'கணக்கு' போடட்டும். ஆனால் 'அம்மா' கணக்கு வேற மாதிரி.! மத்திய அரசோடு சுமூக உறவுன்னுதான் சொல்லியிருக்காங்க. மாநில அரசுக்கு இப்போ திமுக- விளையாடிட்டுப் போனதால ஒரு லட்சம் கோடிக்கு மேல நெருக்கடி இருக்கு. மத்திய அரசுதான் உதவணும். அதுக்காக அந்தக் கட்சியோட கூட்டணி எல்லாம் சேர முடியாது. சேர்ந்தால் காங்கிரஸ் தலைமையில நடந்த எல்லாவித ஊழலுக்கு அதிமுக-வும் சேர்ந்து பதில் சொல்ல வேண்டியிருக்கும். தேவையா அது. குஜராத் மோடிகூட பிரதமர் மன்மோகன் சிங்குடன் நல்ல நட்புறவைதான் வச்சிருக்கார்.அதுக்காக அவர் என்ன காங்கிரஸ் கட்சியோட கூட்டணியா வச்சிகிட்டார்.பக்கத்து மாநில முதல்வர் எடியூரப்பா இம்புட்டு இடியையும் தாங்கிட்டு இருக்காரே. மத்திய அரசு உதவி இல்லாமலா. அந்த மாதிரிதான் அதிமுக-வும் உறவை வச்சுக்கும். நல்ல நட்புறவு இருக்கும். ஆனால் கூட்டணி எல்லாம் கிடையாதுங்கிறதை அங்கேயே போட்டுடைச்சு இருக்கார். தில்லுமுல்லு செய்து ஜெயிச்சிட்டுப் போன ப. சிதம்பரம்ணு போட்டுத் தாக்கியிருக்காங்க. அது மட்டுமல்ல மத்திய அரசு கொண்டுவந்த தூத்துக்குடி-கொழும்பு கப்பல் போக்குவரத்தை ரத்து செய்யணும்னு சொன்னதோடு நிக்காம, அதுக்கான துவக்க விழாவுல தமிழக அரசு சார்பா யாரையும் போகவிடாம புறக்கணிப்பு செய்திருக்காங்க. அதாவது அரசியல் வேற நட்புறவு வேறங்கிறதுதான் அதிமுக-வோட போக்குன்னு'' போட்டுடைத்தார் சவருமுட்டி.



"சரிப்பா இந்த மாறன் விவகாரம் என்னதான் ஆகுமாம். ஒண்ணுமே தெரியலையே.."- அன்வர்பாய்.



''நான் சொல்றன். இதுக்கு முன்னாடி ஆ.ராசா என்ன சொன்னார். நான் ஒரு தப்பும் பண்ணலே. மிஸ்டர் கிளீன் அப்படின்னுதானே! அந்தம்மா கனிமொழி என்ன சொன்னது. எனக்கும் இந்த ஊழலுக்கும் தொடர்பே இல்லை. நான் ரொம்ப ரொம்ப சுத்தம்னுதானே! இப்போ அவிங்க ரெண்டு பேரும் டெல்லி திகார் சிறையில கம்பி எண்ணிகிட்டிருக்காங்க.அதே மாதிரிதான் நம்ம தயாநிதி மாறன் விவகாரமும் முடியும்ணு சொல்றாங்க. அவர் பதவி விலகணும்னு முக்கிய எதிர்கட்சி எல்லாம் சொல்லியாச்சு. இப்போ டெல்லி போன முதல்வர் ஜெயலலிதாவும் சொல்லிட்டாங்க. பாராளுமன்றக் கூட்டம் வேற கூட இருக்கு. தயாநிதியை பதவி இறக்காம அந்த கூட்டத்தை நடத்தினா நம்ப பிரதமர் பாடு பெரும் திண்டாட்டமா போயிடும். அதனால வேற வழியில்ல. எல்லா «வைலயும் முடிஞ்சிருக்கு. கூடிய சீக்கரம் தயாநிதி பதவி விலகுவாரு. பிறகு அவருக்கும் சம்மன் வரும். டெல்லிக்குப் போவாரு. அப்படியே திகாருக்கும் போயிடுவாரு. நீ ஒண்ணும் கவலைப்படாதேப்பா'' என்று நக்கலடித்தார் சித்தன்.



"என்னமோ நான்தான் ஊரை அடிச்சு உலையில போட்ட மாதிரி...நான் எதுக்கு கவலைப்பட போறேன்"- சுவருமுட்டி



"சரிப்பா முதல்வர் ஜெயலலிதா ஈழப் பிரச்சனைய இம்புட்டு சீரியஸா கையில எடுப்பாருன்னு கலைஞர் நினைக்கவே இல்லையாமே. தெரியுமா சேதி?"- அன்வர்பாய்.



''நம்பளை மாதிரியே அந்த அம்மாவும் 'டீல்' பண்ணுவாங்கன்னு நினைச்சிருப்பாரு போல. பார்த்தா சட்டமன்றத்துல 'ராஜபக்சே போர்க் குற்றவாளி.நடவடிக்கை எடுக்க வேண்டும்.அந்த நாட்டின் மீது பொருளாதாரத் தடையை கொண்டுவர இந்தியா அழுத்தம் கொடுக்கணும்னு வேற ஒரே பாய்ச்சலா பாய்ஞ்சுட்டாங்க. அதுமட்டுமில்ல, டெல்லியில பிரதமரை சந்திச்சப்போவும் அந்த விசயத்தையே வலியுறுத்தியிருக்காங்க. ஈரேழு பதினான்கு லோகத்துக்கும் நான்தான் தமிழின தலைவர்னு சொல்லிகிட்டிருந்த கலைஞர் டோட்டல் டேமேஜ். அங்கே போர் முடிந்த இரண்டு வருஷமா அப்படித் தீர்மானம் கொண்டுவரணும்னு எல்லோரும் கேட்டுக்கிட்டாங்க.கலைஞர் அதை செய்யல. காங்கிரஸ மனசு நோகக்கூடாதுன்னு விளையாட்டு காட்டினாரு. இப்போ அந்த அம்மா நிஜமாகவே விளையாடிட்டாங்க. பாவம் நான் தமிழன்னு இனிமே அவரால வெளியில சொல்லிக்கவே முடியாதபடி செய்துட்டாங்க'' என்றவாறு சிரிக்காமல் அழுதார் கோபாலு.



"அதுக்கு ஏன்பா அழறே. இப்ப என்ன நடந்துபோச்சு.."- சித்தன்.


''ஒண்ணுமே நடக்கல. அதுதான். திமுக உயர்மட்டக்குழு கூடியது. அவ்வளவுதான். மகள் கனிமொழி விடுதலைக்கு உதவாத காங்கிரஸ் கூட்டணி தேவைதானா. பேசாம விலகிடுவாருன்னு நினைச்சேன். அதுவும் நடக்கல. 'அவர் ஆசைப்படி' தயாநிதியும் உள்ள போயிடுவாருன்னு நினைச்சேன். அதுவும் இப்ப நடக்கல. பிறகு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாத்துவாங்கன்னு நினைச்சேன். அதுவும் நடக்கல. இப்படி என்னோட கவலை பெரிசா நீண்டுகிட்டே போகுதா...அதுதான் கண்ணீர் விட்டேன்"- கோபால்



''நீ காங்கிரஸ் கமிட்டி பற்றி பேசினதும்தான் ஞாபகம் வருது. தமிழ்நாட்டுத் தலைவர் தங்கபாலுவை வர்ற 20-ம் தேதிக்கு பிறகு மாத்திடுவாங்களாம்.அதுக்கான வேலை எல்லாம் தீவிரமா நடக்குது.தங்கபாலு நொந்தபாலுவாகப் போகிறார்.மனுசன் கலைஞரு கூட சேர்ந்துகிட்டு என்னமா ஆடினாருன்னு அவிய்ங்க கட்சி ஆளுங்களே 'அட்ராசக்கை' சொல்றாங்க. புது தலைவர் யாருங்கிறதுதுதான் பேச்சு. அப்படி வர்ற தலைவர் அதிமுக-வுடன் சுமூக உறவை ஏற்படுத்திக்கிறவரா இருக்கணும். ஜெயலலிதாவுக்கும் புடிக்கணும்.அப்படியான ஆளுதான் சரிபடும். சென்ட்ரல் கவர்மெண்டுக்கு அந்தம்மா ரொம்பவும் குடைச்சல் கொடுக்க கூடாதுன்னு டெல்லி நினைக்கிறதாம்.அந்த வகையில பார்த்தா ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்குதான் வாய்ப்புங்கிறாங்க. இல்ல சதர்சனம் நாச்சியப்பனுக்கும் வாய்ப்பு என்கிறாங்க, இல்லே ப.சிதம்பரம் காட்டும் ஆளுக்குதான்னும் சொல்றாங்க. யார் வந்தா என்ன, வேட்டி சட்டைய கிழிச்சுக்கறதை தவிற புதுசா ஒரு சாதனையும் செய்யப்போறதில்லங்கிறதுதான் 'தொட்டுத் தொடரும் பட்டுப் பாரம்பரியம்'''- சொன்னபடியே சிரித்தார் சுவருமுட்டி.



"இந்த செய்தி சிரிக்கக் கூடியதல்ல. நாம எல்லாம் தலைகுனியக் கூடியது. சேனல்-4 வெளியிட்ட ஈழ மக்களின் படுகொலைக் காட்சிகளை பார்த்தீர்களா? அது பற்றி ஒன்றையுமே பேசாமல் விட்டால் எப்படி?"- ஆதங்கத்தோடு கேட்டார் சுவருமுட்டி.



''எவனோ ஒரு மொழி, நம் இனம் சாராத ஒரு அந்நிய தேசத்துகாரன் முயற்சி எடுத்துக் கொண்டுவந்தது. முதலில் அதற்குத் தலைவணங்கணும். இங்க நம்ம ஆட்களும் அப்படியானதை எல்லாம் மறைச்சுட்டு மானாட மயிலாடன்னு ஆடிக்கிட்டிருந்தாங்க. ஆனால் அந்த சேனல் மனிதர்கள் என்ன செய்தார்கள் பார். ஈழ மக்களின் துயரத்தை அம்பலப்படுத்தி,சிங்கள தேசத்தின் இனவெறியை வெளிச்சம் போட்டு காட்டியிருக்காங்க.இப்போ உலக மனித இனமே அதைப் பார்த்து குமுறிகிட்டு இருக்கு.இங்க பெரிய அண்ணன் மாதிரி இருக்கும் இந்தியா மட்டும் கொஞ்சம் ஒதுங்கியிருந்தா போதும். ராஜபக்சேவை அப்படியே பிரிச்ச மேய்ஞ்சுடுவாங்க. அம்புட்டு கொதிப்புல இருக்காங்க. அதுக்க ஏத்த மாதிரி 'கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே' என்று இங்க தாய்த் தமிழகத்தல் இருந்து பேசிகிட்டு இருக்கிற நம் தலைவர்கள் எல்லாம் ஒண்ணா சேர்ந்து பெரிய நெருக்கடிய இந்தியாவுக்குக் கொடுக்கணும். சும்மா ஆளாளுக்கு ஏதாவது பேசிகிட்டு இருக்கிறாங்க. ஒருத்தர் மேல ஒருத்தர் குறைசொல்லிக்கிட்டு இருக்கிறாங்க. என்னத்தை சொல்றதுன்னு'' வருத்தப்பட்டார் சித்தன்.



''உங்களுக்கு தெரிந்தது அவ்வளவுதான். அந்த சேனல்-4 வெளியிட்ட காட்சிகளைப் பார்த்ததில் இருந்தே இங்கே ஒரே காய்ச்சல்தான்.என்ன விதமான போராட்டத்தை நடத்துறதுன்னு தலைவருங்களுக்குள்ள பேசிக்கிட்டு இருக்காங்க. இந்த வீடியோக் காட்சிகளை டெல்லிக்கு எடுத்துக் கொண்டுபோய் வடநாட்டு அரசியல் கட்சி தலைவர்களை எல்லாம் அழைத்து போட்டுக் காட்டி பிரச்சாரப்படுத்துவதோடு, அவர்களின் ஆதரவையும் திரட்டி பாராளுமன்றத்தில் பிரச்சனைய எழுப்ப வைக்கணும்னு ஒரு முயற்சி நடந்துகிட்டிருக்கு. அது இல்லாமா எல்லா ஆதரவு அமைப்புகளும் ஒன்றுகூட பெரிய கண்டனக் கூட்டம் ஒன்றை நடத்தவும் பேசிக்கிட்டு இருக்காங்க. இன்னும் ஒரு தரப்பு இந்த வீடியோப் பதிவுகளை ஒவ்வொரு கல்லூரிக்கும் நேரில் எடுத்துக் கொண்டு போய் மாணவர்களிடம் கொடுக்க வேண்டும்.கல்லூரி மாணவர்களின் ஆதரவுதான் பலமானதாக இருக்கும் என்பதோடு வழக்கறிஞர்கள் தரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்த வருகிறார்கள்.விரைவில் ஒரு போராட்டம். சிங்கள அரசக்கு எதிராக நடக்கும். அதே போன்று இந்தியா இலங்கைக்கு எந்த விதத்திலும் உதவக்கூடாது என்பதையும் அந்த போராட்டம் சொல்லுமாம். பார்க்கலாம்'' என்று எழுந்தார் சித்தன். (சபை மீண்டும் கூடும்)



- பா.ஏகலைவன்