19 June, 2011

மாற்றான் தோட்டத்து மலர்..... : காலச்சுவடு

அற்ற குளத்து அற்புத மீன்கள்




மே 16 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில்
ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்றுக் கொண்ட ஓரிரு மணிநேரத்துக்குப் பின்னர் என் இலக்கிய நண்பரொருவருடன் புதிதாகக் கட்டப்பட்ட பழைய தலைமைச் செயலகக் கட்டடத்துக்குச் சென்றேன். கடந்த ஒரு வருடத்திய எனது பயணங்களில் கால்நடையாகவும் இருசக்கர வாகனங்களிலும் ஆட்டோ, பேருந்துகளிலும் அந்தக் கட்டடத்தைப் பலமுறை கடந்து சென்றிருக்கிறேன். கருணாநிதியின் கனவு மாளிகையாக வர்ணிக்கப்படும் மிகப் பிரும்மாண்டமான அக்கட்டடத்தைக் கடந்து செல்வது என்பது எப்போதுமே ஒரு அசௌகரியமான அனுபவமாகவே இருந்து வந்திருந்தது எனக்கு. அரசு உயர் அதிகாரிகள் கொலுகொண்டிருக்கும் பகட்டான அலுவலகங்கள் ஏற்படுத்தும் பதற்றம் தவிர தற்போது பழைய என்னும் அடைமொழியைப் பெற்றுவிட்ட புதிய தலைமைச் செயலகக் கட்டடம் குறித்துப் பரப்பப்பட்டு வந்திருக்கும் எண்ணற்ற கதைகள்தாம் அதற்குக் காரணம் என நினைக்கிறேன். கட்டடத்தின் நுழைவாயில்களில் விறைப்பாக நின்றுகொண்டிருக்கும் காவலர்களின் இமைக்காத விழிகள் அதைக் கடந்துசெல்வோரைச் சந்தேகத்துடன் கண்காணிப்பதாகக் கற்பனை செய்து கொள்வதை என்னால் ஒருபோதும் தவிர்க்க முடிந்ததில்லை. வெளியாள்களின் பார்வை ஊடுருவ முடியாத வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும் அதன் கனத்த சுவர்களுக்குப் பின்னால் நடமாடிக்கொண்டிருந்த தமிழகத்தின் சக்தி மிகுந்த மனிதர்களின் காலடிச் சத்தங்கள் என்னைப் பீதியுறச் செய்யும்.
அந்தக் கட்டடத்திற்குள் ஒரு மீன்தொட்டி இருப்பதாகவும் நாள்தோறும் அங்கு வருகை புரியும் முதல்வர் கருணாநிதி அதில் விடப்பட்டுள்ள மிக அபூர்வமான மீன்களுக்கு உணவளிப்பதைத் தன் தலையாயக் கடமைகளில் ஒன்றாகக் கொண்டிருந்ததாகவும் ஊடகங்களில் இடம்பெற்ற சில செய்தித் துணுக்குகளைப் படித்திருந்த எனக்கு அந்த மீன்தொட்டி பற்றியும் அதிலுள்ள மீன்கள் பற்றியும் மிகப் பரிவோடு அவற்றுக்கு உணவளிக்கும் முதல்வரைக் குறித்தும் உருவாகியிருந்த சித்திரங்கள் கவித்துவமானவை. அந்த மீன்களின் மீது கருணாநிதி அளவற்ற அன்பு கொண்டவர் எனவும் அவற்றை அவர் தன் சொந்தக் குழந்தைகளைப் போல் பராமரித்து வருகிறார் எனவும் கேள்விப்பட்டிருந்தேன். நாள் தவறாமல் அங்கு வரும் கருணாநிதி அவற்றுக்குத் தன் கையாலேயே உணவளிப்பாராம். மீன்களுக்கும் அவர்மீது அளவற்ற பிரியமாம். தொட்டியினருகே அவரது நிழல் தென்பட்டதும் அவை துள்ளிக் குதிக்குமாம். மீன்களுக்கு ஒழுங்காக உணவளிக்கப்பட வேண்டுமென்பதிலும் தொட்டியில் நிரப்பப்பட்டிருக்கும் தண்ணீர் தூய்மை கெடாமல் பாதுகாக்கப்பட வேண்டுமென்பதிலும் அவர் அவ்வளவு கறாராக இருப்பாராம். அந்த மீன்கள் முதல்வரின் பிரியத்துக்குரியவை என்பதால் அமைச்சர் பெருமக்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் தலைமைச் செயலக அதிகாரிகளும் காவல் துறை உயரதிகாரிகளும் அவற்றின்மீது பேரன்பு கொண்டவர்களாகவே இருந்திருப்பார்கள் அல்லவா? என்றாவது ஒரு நாள் இவ்வளவு முக்கியஸ்தர்களின் பேரன்பைப் பெற்ற அதிமுக்கியமான அந்த மீன்களையும் மீன் தொட்டியையும் மீன்தொட்டி உள்ள தலைமைச் செயலகக் கட்டடத்தையும் எனக்குத் தெரிந்த அரசியல்வாதி அல்லது அரசு உயரதிகாரியின் உதவியுடன் நேரடியாகப் பார்த்துவிட வேண்டுமென்ற ஆசையுமிருந்தது. குறிப்பாக முதல்வர் அவற்றுக்கு உணவளித்துக்கொண்டிருக்கும் அந்தக் காட்சியைப் பார்த்துவிட வேண்டுமென்பது ஒரு ஏக்கமாக வளர்ந்திருந்தது.

ஆனால் கடந்த மே 13ஆம் தேதி தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்புவரை புதிதாகக் கட்டப்பட்ட தற்போதைய தலைமைச் செயலகக் கட்டட வளாகத்துக்குள் நுழைவது என்பது ஒரு சாதாரண மனிதனுக்கு அவ்வளவு கவித்துவமான அனுபவமாக இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பதால் நான் அதற்கு முயலவே இல்லை. என் ஆசை நிராசையாகிவிடக் கூடுமோ எனக் கலங்கிக்கொண்டிருந்த தருணத்தில் நம்பவே முடியாத வகையில் கடந்த மே 16ஆம் தேதி அதற்கான வாய்ப்புக் கிடைத்தது. தான் வெற்றிபெற்றால் பழைய தலைமைச் செயலகக் கட்டடமான புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்தே ராஜ்ய பரிபாலனம் செய்யப் போவதாக அறிவித்திருந்த ஜெயலலிதா தலைமையிலான கூட்டணி முன்னணி பெற்றுவருவதாகச் செய்திகள் வரத் தொடங்கிய அன்றே தலைமைச் செயலகம் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றப்பட்டுவிட்டதாகவும் இப்போது யார் வேண்டுமானாலும் புதிய தலைமைச் செயலகக் கட்டட வளாகத்தைப் பார்வையிடலாம் எனவும் வெளிவந்த தகவல்களையடுத்து 16ஆம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு நண்பருடன் புறப்பட்டுச் சென்றேன். கிடைத்த தகவல் நம்ப முடியாததாகவும் இருந்தது. அப்போதுதான் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையின் பதவியேற்பு விழா முடிந்திருந்தது. முதல்வரும் அமைச்சர் பெரு மக்களும் கோட்டைக்குப் புறப்பட்டுப் போயிருந்தார்கள். வாலாஜா சாலையில் இருக்கும் இன்னும்கூடக் கட்டி முடிக்கப்படாத அந்தக் கட்டடத்தின் பொதுமக்கள் நுழைவாயிலை அடைந்தபோது அங்குள்ள காவல் கூண்டில் காவலர்கள் ஓரிருவர் நின்றுகொண்டிருந்தனர். அநேகமாக இருவருமே பெண் காவலர்களாக இருக்க வேண்டும். கெடுபிடிகளுக்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. ஆள்கள் மிகச் சுதந்திரமாக உள்ளே நுழைந்துகொண்டிருந்தனர். வளாகத்தினுள் இருபது முப்பது பேர் நடமாடிக்கொண்டிருப்பது தென்பட்டது. கரை வேட்டி, சட்டை உடுத்திய கிராமத்து மனிதர்கள். தம் தலைவியின் பதவி யேற்பு விழாவைக் காண்பதற்காகத் தொலைதூரக் கிராமங்களிலிருந்தும் நகரங்களிலிருந்தும் வந்தவர்களாயிருக்க வேண்டும்.

அவர்களைப் பார்த்ததும் நாங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மையானதுதான் என்னும் நம்பிக்கை ஏற்பட்டது. ஆனால் கட்சிக்காரர்களைத் தவிர மற்றவர்களால் சுதந்திரமாக உள்ளே நுழைய முடியுமா என்னும் சந்தேகமும் எழத்தான் செய்தது. அவர்கள் யாரிடமிருந்தாவது சிறப்பு அனுமதி பெற்றுக்கொண்டு உள்ளே நுழைந்திருக்கலாம். வாலாஜா சாலையிலுள்ள பொது மக்கள் நுழைவாயிலைவிட அண்ணா சாலையில் இருக்கும் பிரதான நுழைவாயில் வழியாகப் போவது எளிதாக இருக்கும் எனக் கற்பனை செய்து கொண்டு அங்கு சென்றோம். அந்த நுழைவாயிலின் முன்பகுதியில் இருந்த காவல் கூண்டிலுங்கூடக் காவலர்கள் சிலர் தென்பட்டனர். அவர்களைப் பார்த்ததும் கொஞ்சம் தயங்கினோம். எங்களிடமிருந்த பத்திரிகையாளர் அடையாள அட்டையைக் காட்டி உள்ளே நுழைய அனுமதி கேட்கலாமா என யோசித்தவாறே நுழைவாயில் முகப்பை நெருங்கினோம். கூண்டிலிருந்த காவலர்கள் ஏனோ முகத்தைத் திருப்பிக்கொண்டனர். அவற்றில் தென்பட்டது கூச்சமா வெறுப்பா என்பதைத் தீர்மானிக்க முடியவில்லை. அதற்குள் நண்பர் பெரிய இரும்புக் கேட்டைக் கடந்து வளாகத்துக்குள் நாங்கள் வந்த இரு சக்கர வாகனத்தைச் செலுத்தியிருந்தார். மரத்தடியில் வண்டியை நிறுத்தியபோது எதிரில் காவல்துறை அதிகாரி ஒருவர் தென்பட்டார். அநேகமாக அவர் சப்-இன்ஸ்பெக்டராக இருக்க வேண்டும். அவர் ஏதாவது கேட்பார் என எதிர்பார்த்தோம். ஆனால் அவருங்கூட வெடுக்கென முகத்தைத் திருப்பிக்கொண்டார்.

எங்களுக்கு ஓரளவுக்குத் துணிச்சல் வந்தது. மிக மெதுவாக சட்டமன்றக் கட்டடத்தின் வாயிலை அடைந்து உள்ளே எட்டிப்பார்த்தோம். உள்ளே தென்பட்ட ஆள்களின் நடமாட்டத்தைப் பார்த்தபோது எங்களுக்கு அது அண்ணா சமாதிபோல, எம். ஜி. ஆர். சமாதி போல ஒரு சுற்றுலாத் தளமாகவே தென்பட்டது. ஓரளவு பதற்றம் நீங்கிய மனங்களுடன் உள்ளே நுழைந்தோம். கட்டடம் உண்மையிலேயே பிரும்மாண்டமாக இருந்தது. சட்டமன்றக் கூடத்தையும் அதையடுத்து இருந்த மேலவைக் கூடத்தையும் சுற்றிக்கொண்டு செல்லும் வட்டப்பாதை நுழைவாயிலிருந்து இருகூறுகளாகப் பிரிந்து சென்றது. கட்டடத்தின் ஆகிருதியோடு ஒப்பிட்டால் அது மிகக் குறுகலான பாதை. வழியெங்கும் அலுவலக அறைகள், காத்திருப்போர் கூடங்கள். சுவர்களில் நேர்த்தியான பெயர்ப்பலகைகள் பதிக்கப்பட்டிருந்தன. தீராத ஆச்சரியத்துடன் அவற்றின் வழியே நடந்துகொண்டிருந்த மனிதர்களின் முகங்களில் ரகசியமான பயம் தென்பட்டது. சட்டமன்றக் கூடம் பூட்டப்பட்டிருந்ததை யூகிக்க முடிந்தது. பளிங்குக் கற்கள் பதிக்கப்பட்ட தரையில் ஆங்காங்கே குப்பைகள் தென்பட்டன. எதிரிலும் பக்கவாட்டிலும் எங்களைக் கடந்துசென்றவர்கள் யாராக இருக்கக்கூடும் என யோசித்தவாறே எண்ணற்ற அறைகளையும் கூடங்களையும் கொண்ட அப்பாதையின் வழியே நடந்து முதல் தளத்தை அடைந்தோம். யாருமே வழி நடத்தாதபோதும் அவை எங்களைத் திட்டவட்டமான ஒரு இடத்தை நோக்கித் தள்ளிச்செல்வது போல் பட்டது. தடுத்துநின்ற கண்ணாடிக் கதவுகளை ஒன்றன் பின் ஒன்றாகத் தள்ளிக்கொண்டு நுழைந்தபோது வட்டவடிவிலான, மிகப் பிரும்மாண்டமான கான்கிரீட் கூரையும் அதன் மையப் பகுதியில் வட்டவடிவிலான மீன்தொட்டியும் தென்பட்டது. மீன்தொட்டி என்பது நெருங்கிச் சென்று பார்த்தபோது தான் தெரிந்தது. மீன்தொட்டியைப் பற்றி நான் உருவாக்கிக்கொண்டிருந்த கற்பனைக்கும் அதற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. என் கற்பனை ஒரு பெரிய கண்ணாடித் தொட்டியாயிருந்தது. நான் பார்க்க வாய்த்திருந்தவற்றை விட நான்கைந்து மடங்கு பெரியது. தொட்டியில் மீன்கள் இருக்க வாய்ப்பில்லை என்றார் நண்பர். அவருக்கு ஏன் அப்படித் தோன்றியது என்பதை என்னால் யூகிக்க முடியவில்லை. ஆனால் சற்று நெருங்கியதும் கலங்கலான நீர்ப்பரப்பில் மீன்களின் அலையடிப்புத் தென் பட்டது. ஆரஞ்சு, இளஞ்சிவப்பு, வெள்ளை, கருநீல நிறங்களில் தம் மெல்லிய துடுப்புகளை அசைத்து மிக அற்புதமாக நீந்திக்கொண்டிருந்தன அவை. பல சிறியவை. மீன்களின் எடை பற்றியும் விலை குறித்தும் தன் அனுமானங்களை மற்றவர் களுக்குச் சொல்லிக்கொண்டி ருந்தார் எங்களுக்குப் பக்கத்தில் நின்ற ஒரு கட்சிக்காரர். சில மீன்கள் ஒரு கிலோவுக்கும் அதிகமான எடை கொண்டவை யாயிருக்க வேண்டுமெனவும் ஒவ்வொரு மீனும் லட்சக்கணக் கான ரூபாய் பெறும் எனவும் அவர் சொன்ன தகவல்கள் புதி யவை போல்தான் தோன்றின.

அவை அவருக்கு ஒரு ஆச்சரியமான அனுபவமாக இருந்திருக்க வேண்டும். தன் தலைவி முதலமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொள்வதைப் பார்ப்பதற்காகவே அவர் சென்னைக்கு வந்திருக்க வேண்டும். பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்ற பதவியேற்பு விழாவின் நேரடி ஒளிபரப்பை மெரினாவில் நிறுவப்பட்டிருந்த தொலைக்காட்சிப் பெட்டிகளின் பிரும்மாண்டமான எலக்ட்ரானிக் திரைகளில் பார்த்து ரசித்துவிட்டு அப்படியே அண்ணா, எம்.ஜி.ஆர். சமாதிகள், உழைப்பாளர் சிலை ஆகியவற்றைப் பார்த்த களைப்புடன் நேராக இங்கே வந்திருப்பார். இதற்குப் பிறகு சாயந்திரம் கடற்கரைக்குச் செல்லும் திட்டம்கூட இருந்திருக்க வேண்டும். அவருக்கு இந்தக் கட்டடத்தின் பிரும்மாண்டமும் அழகிய வண்ண மீன்களும் பேரதிசயமாகவே தென்பட்டிருக்க வேண்டும். தொண்டர்கள் சிலர் களைப்பு மேலிட்டோராய் இன்னும் பூர்த்திசெய்யப்பட்டிருக்காத சலவைக்கல் படிக்கட்டுகளில் சரிந்து உட்கார்ந்திருந்தனர். கரிந்த தீக்குச்சிகளும் சில சிகரெட் துண்டுகளும் அங்கே இறைந்து கிடந்ததைப் பார்த்த எனக்கும் புகைபிடிக்கும் விருப்பம் உண்டாயிற்று. பத்திருபதடி தூரத்தில் பெண் காவலர்கள் இருவர் பிளாஸ்டிக் நாற்காலிகளில் எதிரெதிராக உட்கார்ந்து சிரித்துச் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களைப் பார்த்ததும் தயங்கினேன். “ஒரு பிரச்சினையுமில்ல, நம்ம ஆட்சி தானே?” என ஒரு கரைவேட்டிக்காரர் யாருக்காகவோ சொன்னதை எனக்காகச் சொன்னதாக எடுத்துக்கொண்டு படிக்கட்டில் உட்கார்ந்து புகை பிடிக்கத் தொடங்கினேன். பிளாஸ்டிக் நாற்காலிகளில் உட்கார்ந்திருந்த பெண் காவலர்கள் முகத்தைத் திருப்பிக்கொண்டு பேச்சையும் சிரிப்பையும் தொடர்ந்தனர்.

நான் இயல்பாக இருக்க முயன்றேன். கட்டுமானப் பணியாளர்கள் சிலர் சோம்பல் தீராத முகங்களுடன் குனிந்திருந்தனர். பாவப்பட்டிருந்த பளிங்குக் கற்கள் இன்னும் மெருகேற்றப்படாததால் சொரசொரப்பாக இருந்தது தரை. நுழைவாயில் சுவரில் பதிக்கப்பட்டிருந்த பளிங்குக் கல்வெட்டில் தென்பட்ட கருணாநிதி, மன்மோகன் சிங், சோனியா காந்தியின் பெயர்களைப் பார்த்தபோது இனி அவை ஒருபோதும் மெருகேற்றப்பட வாய்ப்பில்லை எனத் தோன்றியது. தோல்வி அல்லது வெற்றியின் குறியீடாக இந்தக் கட்டடம் உருக்குலைந்து போகும்படி விடப்படலாம். தமிழகத்தின் சுமார் நாற்பதாண்டுக் கால வரலாற்றைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இப்படித்தான் தோன்றும்.

தீராப்பகை கொண்ட இரு கட்சிகள் தாம் ஆட்சியைப் பிடிக்கும் ஒவ்வொரு தருணத்திலும் தோற்கடிக்கப்பட்டவர்களின் ஞாபகங்களை அழிக்க முயல்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் அறம். ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதியான அந்தக் கணத்தில் அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுவிடுகின்றன. அரசு அலுவலகங்களிலும் பொது இடங்களிலும் வைக்கப்பட்டிருக்கும் தலைவர்களின் புகைப்படங்கள் மின்னல் வேகத்தில் மாற்றப்படுகின்றன. பேருந்துகளிலும் பாலங்களிலும் கழிப்பிடச் சுவர்களிலும் செதுக்கப்பட்டிருக்கும் பொன்மொழிகள் சுவடின்றி அழிக்கப்படுகின்றன. ஒருவர் முதல்வராக இருக்கும்போது மற்றவர் சட்டமன்றத்தைப் புறக்கணிக்கிறார். சட்டமன்றம் யாராவது ஒரு தரப்பினருக்குப் பாதுகாப்பற்றதாக மாறுகிறது. வரலாற்றுக் காலம் தொட்டு இதுதான் நடந்து வந்திருக்கிறது. பகை முடிக்கும் மன்னன் தோற்கடிக்கப்பட்டவனின் அடையாளங்களை அழிப்பதற்கு முயல்கிறான். கொடிய ஆயுதங்களுடன் திமுதிமுவென நுழைந்து சூறையாடும் காலங்கள் முடிந்துவிட்டன. ஜனநாயகச் சமூகத்தில் பழி தீர்க்கும் முறைகள் அரசியல் சாசனத்துக்குட்பட்டவையாக இருக்க வேண்டுமென்பது விதி.


“என்ன செய்யப் போறாங்கன்னு தெரியல” என்றார் களைத்துப்போய்ப் படிக்கட்டில் உட்கார்ந்திருந்த பார்வையாளர் ஒருவர்.

“ஏதாவது கவர்மெண்ட் ஆபீஸ் வரும்”

“சில மாற்றங்கள் பண்ணி ஆஸ்பத்திரியா மாத்தலாம்”

“அம்மா அத விரும்பமாட்டாங்க”

“வள்ளுவர் கோட்டத்தப் போட்டு வெச்ச மாதிரி இதயும் போட்டு வெச்சுருவாங்க”

நண்பர் பெருமூச்செறிந்தார்.

“ஆயிரத்து இரநூறு கோடி செலவுன்னு சொல்றாங்க”

“என்ன பண்ண?”

எழுந்து மறுபடியும் மீன்தொட்டிக்கு வந்தோம். நல்ல வெயில். கடல் காற்றின் குளுமை ஓரளவுக்கு இதந்தந்தது. மீன்கள் பிளந்த வாயுடன் பார்வையாளர்களை நோக்கித் தாவின. கண்களில் பசி தெரிந்தது. வெள்ளைச் சட்டையுடன் வந்து நின்ற மனிதரைக் கருணாநிதி என நினைத்திருக்குமோ? தினமும் அந்த மீன்களுக்குக் கருணாநிதி உணவு கொடுத்து வந்ததாகச் சொல்லப்பட்டது. ஆனால் எல்லா நாள்களிலும் எல்லா வேளைகளிலும் அத்தனை மீன்களுக்கும் அவர் ஒருவராலேயே உணவு கொடுத்து வந்திருக்க முடியுமா என்ன? அதற்குப் பொறுப்பாக யாராவது சிலர் இருந்திருக்கக்கூடுமல்லவா? அவர்கள் எங்கே போனார்கள்? அந்த மீன்களின் மீது அவர்களுக்கும் பரிவு இருந்திருக்கும்.

“பாவம், பசி போல இருக்கு”

“ஆமா, பதிமூணாம் தேதி காலைல பத்து மணிக்கப்புறம் இதுகளுக்கு யாரும் இரை கொடுத்திருக்க மாட்டாங்க”

அது உண்மையென்றுதான் தோன்றியது.

“நாலஞ்சு நாள்ள செத்துரும்”

“யாராவது பிடிச்சுக்கிட்டுப் போயிருவாங்க”

“இதெல்லாம் காஸ்ட்லியான மீனுக. லட்சக் கணக்குல இருக்கும்”

“வாஸ்து மீன்களா இருக்கும்”

“ஆனா இந்த வாஸ்து மீன்களால கூடக் கலைஞரக் காப்பாத்த முடியாமப் போச்சு பாருங்க”

அருகிலிருந்தவர் உள்ளடங்கிய தொனியில் சிரித்தார். மீன்கள் தண்ணீரில் விழுந்த ஒவ்வொரு நிழலையும் இரைக்காகக் கெஞ்சிக்கொண்டிருந்தன. நாங்கள் அங்கிருந்து நகர்ந்தோம். மாடிப்படிகள் விசாலமாக இருந்தன. ஒவ்வொரு தளத்திலும் எண்ணற்ற அலுவலக அறைகள், கூடங்கள். எல்லாத் தளங்களும் ஒரே தோற்றம் கொண்டவையாகவே இருந்தன. ஒவ்வொரு சதுர அடியும் செல்வத்தால் இழைக்கப்பட்டிருந்தன. காத்திருப்போருக்கான அறைகளில் யாருமே இல்லாதபோதும் குளிர் சாதனக் கருவிகள் இயங்கிக்கொண்டிருந்தன. கீழ்நிலைப் பணியாளர்களைப் போல் தென்பட்ட சிலர் மாடிப் படிகளில் இளைப்பாறும் தோரணையில் உட்கார்ந்திருந்தனர். ஒருவர் வெறுந்தரையில் குப்புறப் படுத்துக்கிடந்தார். எங்களைப் பார்த்து தணிந்த குரலில் ஏதோ சொன்னதாகக் கற்பனை செய்துகொண்டோம். பிறகு ஒவ்வொரு தளமாகப் பார்த்துக்கொண்டே நடந்தோம். ஐந்தாவது தளத்தில் முதலமைச்சரின் செயலகம். சிலர் அதை எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தனர். பக்கத்தில் ‘தொங்கும் தோட்டம்’. பச்சைப் பசேலெனத் தோற்றமளித்த குரோட்டன்களும் புற்களும் பிளாஸ்டிக் காலானவையோ எனச் சந்தேகிக்கத் தோன்றியது. அங்கிருந்து அண்ணா சாலையில் வாகனங்கள் அசுர வேகத்தில் விரைந்துகொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. பேருந்துகளில் தாள முடியாத நெரிசல். ஏனோ அங்கிருக்கப் பிடிக்கவில்லை. நண்பரும் புறப்படத் தயாராக இருந்தார்.

இயங்கும் நிலையிலிருந்த லிப்ட்களைப் பயன்படுத்தப் பார்வையாளர்கள் தயங்கிக்கொண்டிருந்தனர். ஒன்றின் முன் அதிகாரிகள் காத்திருந்தனர். நாங்கள் இருவரும் காலியாக இருந்த மற்றொன்றைத் தேர்வுசெய்தோம். உள்ளே நுழைந்து கதவை மூடிக்கொண்ட பின் எங்கே மின் தடை காரணமாக அந்த லிப்ட் பாதியில் நின்றுவிடுமோ எனப் பயமாக இருந்தது. அந்தக் கட்டடத்துக்கான மின் இணைப்பு எந்த நேரத்திலும் துண்டிக்கப்பட்டுவிடலாம் என நினைப்பது நிச்சயம் கற்பனையானதாக இருந்துவிட முடியாது அல்லவா? திடீரென அதன் வாயில்கள்கூட இழுத்து மூடப்பட்டுவிடலாம். உள்ளிருக்கும் பார்வையாளர்களை வெளியேறும்படி எச்சரிக்கக்கூட அதிகாரிகளுக்கு அவகாசமில்லாமல் போகலாம். இக்கற்பனை தந்த பதற்றத்தால் அவசர அவசரமாக வெளியே வந்தோம். வாசலில் கட்டுக்கட்டாகப் புத்தகங்கள். புனித ஜார்ஜ் கோட்டையில் இயங்கிவந்த செம்மொழி நூலகத்திலிருந்து கொண்டுவரப்பட்டவையாயிருக்கும். பணியாளர்கள் ‘பொறுப்பில்லாமல்’ அவற்றை அங்கே போட்டுவிட்டுப் போயிருப்பார்கள். முதல்வர் ஜெயலலிதாவின் கவனத்துக்கு இந்த விஷயத்தை யாராவது கொண்டுசென்றால் ‘பரிகாரம்’ கிடைப்பது நிச்சயம் எனத் தோன்றியது. ஜெயலலிதாவுக்குப் புத்தகங்களின் மீது ஏதாவது கோபமிருக்குமா என்ன?

வெளியே இன்னும் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருந்தது. பறக்கும் ரயிலொன்று பெருஞ்சத்தமெழுப்பியபடி கடந்து சென்றது. கூவத்திலிருந்து வந்த காற்றில் குடலைப் பிடுங்கும் துர்நாற்றம். அதன் கரையோரமிருந்தவர்கள்தாம் வெளியேற்றப்பட்டுவிட்டார்களே! துர்நாற்றத்தைக் கண்ணகி நகருக்கும் கன்னடப் பாளையத்துக்கும் செம்மஞ்சேரிக்கும் கொண்டு சென்றுவிட்டார்களே! இன்னும் ஏன் துர்நாற்றம்? கூவத்தைத் தூய்மைப்படுத்துவதற்கும் சிங்காரச் சென்னையைக் கட்டியெழுப்புவதற்கும் தலா 1200 கோடி ரூபாய் வரை செலவிடப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வந்தனவே! பாழாய்ப்போன இந்தச் சென்னையைச் சிங்காரிக்க இன்னும் எத்தனை ஆயிரம் கோடிகளைச் செலவிட வேண்டுமோ தெரியவில்லை.

கருணாநிதியின் அடையாளங்களை முற்றாக அழிக்கும்வரை இந்தக் கட்டடம் கைவிடப்படலாம். ஒரு சாம்ராஜ்யத்தின் வீழ்ச்சிக்கான குறியீடாகப் பாழடைந்து நிற்கலாம். பிழைப்புத் தேடி அலைந்து திரிபவர்களுக்குச் சற்று இளைப்பாற இதன் பூர்த்தி செய்யப்படாத பளிங்குத் தரைகள் உதவலாம். வீடற்ற சென்னை நகரின் சாலையோரவாசிகள் இரவுகளில் இங்கே வந்து படுத்துக்கொள்ளலாம். காதலர்களுக்கும் கள்ளக் காதலர்களுக்கும் இக்கட்டடத்தின் உள்ளே செல்லும் குறுகலான பாதைகளில் படர்ந்திருக்கும் இருள் உதவலாம். கூவக்கரைகளிலிருந்து புறநகர்களுக்கு விரட்டப்பட்ட சென்னையின் விளிம்புநிலை மக்கள்கூட இங்கே வந்து குடியேறலாம். அப்படி நடந்தால் அது ‘கவித்துவ நீதி’க்கான நம் காலத்தின் உதாரணமாக வரலாற்றில் இடம்பெறக்கூடும். ஆனால் கட்டடம் சமூக விரோதிகளின், பயங்கரவாதிகளின் உறைவிடமாகிவிட்டது என யாராவது விமர்சித்தால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாப்பதாக உறுதி பூண்டுள்ள நம் முதல்வர் அதைச் சரிசெய்ய முயலலாம். கட்டடத்தைப் பூட்டி சீல் வைக்கலாம்.

இந்தத் தருணத்தில் வெகு காலத்துக்கு முன்னால் நான் பார்த்த ‘சக்ரா’ என்னும் இந்தித் திரைப்படம் நினைவுக்கு வருகிறது. நஸ்ருதீன் ஷா, ஸ்மிதாப் பாட்டீல் நடித்தது. மும்பையின் சேரிப் பகுதி ஒன்றை மையமாகக்கொண்ட கதை. நாயகன், நாயகி உள்ளிட்ட எல்லோருமே உதிரிகள். பிக்பாக்கெட் அடிப்பவர்கள், திருட்டுகளில் ஈடுபடுபவர்கள், பாலியல் தொழிலாளர்கள் வாழும் அச்சேரிப் பகுதி குற்றங்களின் ஊற்றுக்கண்ணாக மாறிவிட்டது என அறிவித்து அதை புல்டோசர்கள் மூலம் இடித்துத் தள்ளிவிடுவார்கள். ஆனால் புதிதாகக் கட்டப்பட்ட இந்தப் பழைய தலைமைச் செயலகக் கட்டடத்துக்கு அப்படியொரு நிலை ஏற்பட்டுவிடும் எனக் கற்பனை செய்ய முயல்வது மனப்பிறழ்வின் அறிகுறியாகவே எடுத்துக்கொள்ளப்படும். எனவே எதிர்மறைக் கற்பனைகளைக் கைவிட்டுவிட்டு நம்பிக்கையூட்டும் வேறொரு கற்பனையைப் பற்றி யோசிக்கலாம். மனம் வெதும்பியிருக்கும் முன்னாள் முதல்வர் கருணாநிதி தான் ஆசை ஆசையாய்க் கட்டியெழுப்பிய கனவு மாளிகையை மீட்கச் சபதமெடுக்கலாம். மீண்டும் தமிழக மக்களின் நம்பிக்கையைப் பெற்று ஆறாவது முறையாக முதல்வர் பொறுப்பை ஏற்கும்போது இந்தக் கட்டடத்தைப் புதுப்பித்து அதைத் தமிழக அரசின் புதிய தலைமைச் செயலகமாக அறிவிக்கலாம்.

எவ்வளவுதான் சிதைந்து போயிருந்தாலும் ஒரே வாரத்துக்குள் அதன் பழைய பொலிவை மீட்டெடுப்பதற்குத் தம்மால் முடியும் என்பதை நம் அதிகாரிகள் இப்போது நம் கண் முன்னால் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்களே! ஆனால் அதுவரை கருணாநிதியால் தமிழக மக்களை விடவும், அவரை நம்பி வாக்களித்து ஏமாந்த கோடிக்கணக்கான வறியவர்களைவிடவும் கூடுதலாக நேசிக்கப்பட்ட அந்த மீன்கள் உயிரோடிருக்குமா?